இளைஞர்கள் ரத்த தானம் வழங்குவதன் மூலம் பல உயிர்களை காக்க முடியும் என்று, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் பேசினார்.
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த தான கழகத்தின் சார்பில், அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, மருத்துவமனை டீன் எம்.ஆர். வைரமுத்து ராஜூ தலைமை வகித்தார். இம்முகாமை, மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் ரத்த தானம் செய்தார். பின்னர் ஆட்சியர் பேசியதாவது: ரத்தத்தை தானம் செய்வதன் மூலம் பல உயிர்களை காக்க முடியும். இளைஞர்கள் ரத்த தானம் செய்ய ஆர்வத்துடன் முன்வரவேண்டும். இதுவரை 5 முறை ரத்த தானம் செய்துள்ளேன். ரத்த தானம் செய்வது உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். எவ்வித பின்விளைவுகளும் இல்லை.
மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வங்கியாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டு 24,840 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, பிளாஸ்மா, தட்டணுக்கள் ஆகியவை பிரிக்கப்பட்டு, 50 ஆயிரம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிருந்து தாலுகா மருத்துவமனைகள், தென் மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கும் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, "ரத்தம் கொடு, இப்பொழுதே கொடு, எப்போதும் கொடு' என்ற திட்டம் உருவாக்கப்பட்டு, அதை நோக்கி ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்துக்கு ரூ. 261 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், மதுரை அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் பலனடைந்துள்ளனர் என்றார்.
ரத்த தான தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரா கோட்ஸ் நிறுவனம், சர்வேயர் காலனி, அழகர்கோவில், கள்ளந்திரி ஆகிய 5 இடங்களில் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். முன்னதாக, ரத்த தான கழகத்தின் செயலர் கௌதம நாராயணன் வரவேற்றார்.
விழாவில், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஷீலா மல்லிகா ராணி, ரத்த வங்கித் துறை தலைவர் சிந்தா, இதயவியல் சிகிச்சை துறை தலைவர் ரத்தினவேல், இருப்பிட மருத்துவ அதிகாரி காயத்ரி, அறுவைச் சிகிச்சை நிபுணர் அமுதா, மருத்துவர் மெர்சி உள்பட பலர் பங்கேற்றனர்.
ரத்த தான விழிப்புணர்வு ஊர்வலம்: மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தொடக்கி வைத்தார். இதில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் என். ருக்மணி, துணை இயக்குநர்கள் கே.வி. அர்ஜூன் குமார், ஏ.ஆர். ராஜபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். செவிலியர் பயிற்சி மாணவிகள், மருத்துவ மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.