மதுரை பொன்னகரம் பிராட்வே பகுதியில் வீடுகளுக்கு மத்தியில் உள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர், மாதர் சங்கத்தினர் அக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இந்த மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். மேலும், இக்கடையை அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன், மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்திருந்தார். ஆனால், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்பினர் மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். எனவே, மதுபானக் கடை முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக் கருதி மதுபானக் கடையும் அடைக்கப்பட்டது. இந்நிலையில், பொன்னகரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தினர் மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் சசிகலா, வாலிபர் சங்கத்தின் மாநகர் மாவட்டச் செயலர் கோபிநாத் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், மாணவ, மாணவியர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த கலால் துறை வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலன் மற்றும் போலீஸார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஜூலை 10-ஆம் தேதிக்குள் மதுபானக் கடை இடம் மாற்றப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில், மதுபானக் கடையை அகற்றக் கோரி, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் மற்றும் அண்மையில் மதுரை வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரிடமும் மனு அளித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் இல்லை.
நள்ளிரவில் இப்பகுதியில் உள்ள வீடுகளின் வாசல் முன்பாக அமர்ந்து மது அருந்துகின்றனர். தட்டிக்கேட்டால் தகராறு செய்கின்றனர். இரவு நேரங்களில் வீடுகள் மீது மதுபாட்டில்களை வீசிவிட்டுச் செல்கின்றனர். கடையை இங்கிருந்து அகற்றாவிட்டால், பொதுமக்களே சேர்ந்து அகற்றுவோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.