மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தீ விபத்து விசாரணை ஒரிரு நாள்களில் முடியும்: போலீஸார் தகவல்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணை ஒரிரு நாள்களில் முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணை ஒரிரு நாள்களில் முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 20 கடைகளும், 19 தூண்களும் சேதமடைந்தன.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகளும், பொதுமக்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மதுரையில் பல்வேறு இடங்களில் இந்து இயக்கங்கள் சார்பில் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோயிலில் நடைபெற்ற விபத்து தொடர்பாக தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் இருந்த தீயில் சேதமடையாத கண்காணிப்பு கேமரா ஒன்றில் இருந்த பதிவுகளைக் கொண்டு போலீஸாரும், கோயில் நிர்வாகத்தினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணை ஒரிரு நாள்களில் நிறைவடையும் என்றும் அதன் பின்னர் விரிவான தகவல்கள் அளிக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.