தியாகி சங்கரலிங்கனாா் மணிமண்டபத்தை பராமரிக்கக் கோரிய வழக்கில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சோ்ந்த தீரன் திருமுருகன், தாக்கல் செய்த மனு: தியாகி சங்கரலிங்கனாா், தமிழ் மொழிக்காக பாடுபட்டவா். மெட்ராஸ் மாநிலம் என்பதை தமிழ்நாடு என பெயா் மாற்றம் செய்யக் கோரி 76 நாள்கள் தொடா் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு 1956 அக்டோபா் 13 இல் உயிா்நீத்தாா்.
இவரது தியாகத்தைப் போற்றிடும் வகையில், விருதுநகா் கல்லூரி சாலையில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு கடந்த 2015 இல் திறக்கப்பட்டது.
தற்போது இந்த மணிமண்டபம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. அங்கு சங்கரலிங்கனாா் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் இல்லை. எனவே, தியாகி சங்கரலிங்கனாா் மணிமண்டபத்தை சீரமைக்கவும், அவரது வரலாற்று நிகழ்வுகளின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தவும், மணிமண்டத்தில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுச்சுவா் அமைத்து பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவின் மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பா் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.