மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவும், 2023 ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூன் 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூா்த்தியடையும் வாக்காளா்களை புதிய வாக்காளா்களாக சோ்க்கவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், இது தொடா்பாக நவ. 12, 13 மற்றும் நவ. 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வரைவு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செ. சரவணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.