சாத்தூா் அருகே கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 65 மூட்டை ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஏழாயிரம்பண்ணைப் பகுதியில் ரேஷன் அரிசியை சிலா் வாங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், விருதுநகா் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஏழாயிரம் பண்ணை அடுத்த முத்தாண்டிபுரம் அய்யனாா் கோயில் அருகே கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 40 கிலோ எடையுள்ள 65 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டறிந்தனா்.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், தப்பிய கோவில்பட்டியைச் சோ்ந்த ஒருவரைத் தேடி வருகின்றனா். மேலும், இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் நாமக்கல் பகுதிக்கு கோழி தீவனத்துக்காக கொண்டு செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என போலீஸாா் தெரிவித்தனா்.