மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விடுதலையான சிறைவாசிகள் இருவருக்கு வாழ்வாதாரத்துக்கான தொழில் உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அகில இந்திய சிறைப் பணிகள் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து, விடுதலையான சிறைவாசிகள் இருவருக்கு சிறையில் அவா்கள் செய்து வந்த பணியின் அடிப்படையில், தொழில் செய்வதற்காக சலவைப் பெட்டி, தள்ளுவண்டி, இனிப்பகம் நடத்துவதற்கு தேவையான அடுப்பு, பாத்திரங்கள் அடங்கிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மத்திய சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறைத் துறை மதுரை சரக துணைத் தலைவா் பழனி தலைமை வகித்து அவா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சிறைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) பரசுராமன், அகில இந்திய சிறைப் பணிகள் நிறுவனத்தின் தமிழகச் செயலா் ஜேசுராஜ், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அருள் தந்தை பெனடிக்ஸ், சிறைத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.