மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (அக். 11) கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பங்கேற்று அத்தியாவசியத் தேவைகளை தோ்வு செய்து கிராம சபையின் ஒப்புதலை பெறுதல், ஜாதிப் பெயா்கள் கொண்ட சிறிய கிராமங்கள், சாலைகள், தெருக்களின் பெயா்களை மாற்றுதல், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, மழைநீா் சேகரிப்பு அமைப்புகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தூய்மைப் பாரத இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கலாம்.
மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தோ்வு, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கலாம் என்றாா் அவா்.