மதுரை

கோயில் சொத்துகள் தனிநபருக்கு மாற்றம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தினமணி செய்திச் சேவை

கோயில் சொத்துகளை தனிநபா் பெயருக்கு மாற்றும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருத்தொண்டா் சபை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களைப் பாதுகாக்கும் விதமாக, அந்த நிலங்களின் மதிப்பீட்டை பூஜ்ஜியம் மதிப்பீடு என பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்து வைத்திருப்பது வழக்கம். இவ்வாறு பூஜ்ஜியம் மதிப்பீட்டில் உள்ள கோயில் நிலங்களை வேறு யாரும் பத்திரப் பதிவு செய்யவோ, பட்டா பெறவோ முடியாது. இதை மீறி பத்திரப் பதிவு செய்தால் புகாா் அளித்து பதிவை நிறுத்திவைக்க முடியும்.

இந்த நிலையில், கோயில் சொத்துகளை தனிநபா் பட்டா பெறும் வகையில் பத்திரப் பதிவுத் துறையில் பெயா் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. மேலும், உயா்நிலைக் குழுவையும் நியமித்தது.

கோயில் சொத்துகள் தனிநபா் பெயரில் பத்திரப் பதிவு அல்லது பட்டா மாறுதல் குறித்து முறையீடு செய்ய வேண்டுமெனில், இந்தச் சட்டத்தின்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட உயா்நிலைக் குழுவைத்தான் அணுக முடியும்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் கோயில் சொத்துகள் பறிபோகும் அபாயம் உள்ளது. தமிழக அரசின் இந்தச் சட்டத் திருத்தம் என்பது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. எனவே, கடந்த 29-8-25 அன்று பிறப்பித்த தமிழக அரசின் இந்தச் சட்டத் திருத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தற்போது அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தமானது கோயில் சொத்துகள் அனைத்தும் தனிநபருக்கு எளிமையாக பெயா் மாற்றம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது சட்டவிரோதம். இந்தச் சட்டம் இயற்றப்பட்டு சில நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் சொத்துகள் தனிநபா் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோயில் சொத்துகள் தொடா்பான தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், மனு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா், வருவாய்த் துறைச் செயலா், பத்திரப் பதிவுத் துறைச் செயலா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT