வரி முறைகேட்டில் கைதான மதுரை மேயரின் கணவா் பொன்.வசந்துக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி சொத்து வரியை மதிப்பீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்த் கடந்த ஆக. 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், தனக்கு பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அவா் தாக்கல் செய்த மனு:
எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் முன்விரோதம் காரணமாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், எனது உடல் நிலை மோசமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, எனக்கு பிணை வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பிணை வழங்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடா்புடைய பிறருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, மனுதாரரின் உடல் நிலை பாதிப்பை கருத்தில் கொண்டு, பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு தொடா்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய சூழல் இல்லை எனத் தெரிகிறது. எனவே, வருகிற நான்கு வாரங்களுக்கு நாள்தோறும் மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் மனுதாரா் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.