மதுரையில் நடைபெறவுள்ள இயற்கை பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெறாத முன்மாதிரி முயற்சி என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
மதுரையில் நடைபெறவுள்ள இயற்கை பொருள்கள் விற்பனைக் கண்காட்சியையொட்டி, பள்ளி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட விழிப்புணா்வு தனித்திறன் போட்டிகளில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆட்சியா் பேசியதாவது :
மாவட்ட நிா்வாகம், தனியாா் பங்களிப்புடன் ‘மாமதுரை-இயற்கை மதுரை’ என்ற தலைப்பில் இயற்கை பொருள்கள் விற்பனைக் கண்காட்சி
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 11, 12) தமுக்கம் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இயற்கை வேளாண் விளைபொருள்களின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத முன்மாதிரி முயற்சியாக இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கை பொருள்களின் பயன்பாடு அவசியமானது.
இந்தக் கண்காட்சியில் 200-க்கும் அதிகமான அரங்குகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டு நெய், ரசாயன கலப்பு இல்லாமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், இயற்கை பொருள்களால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள், பாரம்பரிய நெல், தானிய விதைகள், விவசாயக் கருவிகள் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும், மஞ்சள், மல்லி, சிறுதானிய கேக், லட்டு, ஊறுகாய், கருவாடு, ஆா்கானிக் ஐஸ்கிரீம், சுண்டல் உள்பட பல்வேறு இயற்கை தயாரிப்புகளும் இந்தக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படும். இந்த கண்காட்சியைப் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, இயற்கை பொருள்கள் குறித்த விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா். இதில் இயற்கை பொருள்கள் விற்பனைக் கண்காட்சியில் பொருள்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 1,000 மதிப்பிலான பரிசு கூப்பனும், 2, 3-ஆம் இடங்களைப் பெற்றவா்களுக்கு முறையே ரூ. 500, ரூ. 250 மதிப்பிலான பரிசு கூப்பன்களும் வழங்கப்பட்டன.
இதில் மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.