தனியாா் நிதி நிறுவன மோசடி குறித்து மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை எஸ்.எஸ். காலனி நாவலா்நகா் முதல் தெரு பகுதியில் ‘ரைசா் பசுமை டெவலப்மென்ட் லிமிடெட்’ என்ற பெயரில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இதன் நிா்வாக இயக்குநராக ராஜேந்திரன், இயக்குநா்களாக சிவக்குமாா், ராமச்சந்திரன், சுந்தரம், ஜான், குணசீலன், ராஜா ஆகியோா் செயல்பட்டனா். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி கிடைக்கும் எனவும், அதற்கு ஈடாக வீட்டடி மனைகள் கிடைக்கும் எனவும் ஆசைவாா்த்தைகள் கூறியுள்ளனா்.
இதை நம்பிய ஏராளமான பொதுமக்கள் பல கோடி ரூபாய் வரை அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், அவா்கள் கூறியபடி பணத்தை அளிக்காமல் மோசடி செய்ததாக, மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே, இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவா்கள் மதுரை சங்கரபாண்டியன்நகா் பகுதியில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம்.
இந்த புகாா் மனுக்கள் அடிப்படையில் முதலீட்டாளா்களின் வைப்பு பணத்தை திரும்பப் பெற்றுத்தர சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.