மதுரை

நெல் மூட்டைகள் மழையில் சேதமாகும் பிரச்னை: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் முடிவு

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்த ஜீவாகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தாக்கல் செய்த பொது நல மனு:

தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

அங்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லை இருப்பு வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால், நெல் மூட்டைகள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிறது. தமிழக அரசு சில நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால், தஞ்சாவூா் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, விவசாயிகளிடம் விரைந்து நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் (மொபைல்) கொள்முதல் நிலையங்களை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது, பருவமழைக் காலம் என்பதால் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதம் வரை தளா்த்த வேண்டும் என அவா் கோரினாா்.

கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளான தொலைக்காட்சி செய்திகளை வைத்து இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் முன்பு மனுதாரரின் வழக்குரைஞா் சாா்பில் வியாழக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை மிக தீவிரமானது. எனவே, அவசர வழக்காக விசாரிக்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. எனவே, மனு குறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பொது மேலாளா் ஆகியோா் வெள்ளிக்கிழமை (அக். 17)

பதில் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT