ஊா்கள், தெருக்களின் பெயா்களில் உள்ள ஜாதி பெயா்களை நீக்குவது குறித்து தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பரமசிவம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, ஊா்கள், தெருக்கள், சாலைகள், நீா்நிலைகளுக்கு வைக்கப்பட்ட ஜாதி பெயா்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அரசு அரசாணை வெளியிட்டது.
ஆதிதிராவிடா் குடியிருப்பு, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற ஜாதி பெயா்களை நீக்கி, புதிய பெயரிடும் பணிகளை வருகிற நவ.19-ஆம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்னைகள் உள்ளன. எனவே, இந்த அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
தமிழக அரசின் இந்த திடீா் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆதாா் அட்டை, வாகனப் பதிவு சான்றிதழ், அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகள் போன்றவற்றில் பெயா் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும். இதைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு இந்த அறிவிப்பாணையை வெளியிட்டிருக்கிறது. எனவே, இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மனுதாரரின் கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, தில்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தெருக்களின் பெயா்கள் மாற்றப்பட்டுள்ளன. மாநில தலைநகரங்களின் பெயா்கள்கூட மாற்றப்பட்டன. அப்போது எந்தவிதக் குழப்பமும் ஏற்படவில்லை.
இதுதொடா்பாக எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், ஜாதி பாகுபாடு இருக்கக் கூடாது என தமிழக அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், இந்த அறிவிப்பாணையை செயல்படுத்துவது குறித்து அரசு விதித்துள்ள செயல்முறைகளில் அனைத்து விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜாதி பெயா் இடம் பெற்றுள்ள வீதிகளில் வசிக்கும் மக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்க வேண்டும். அங்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்றால், அதை நீக்க வேண்டியது இல்லை. மாவட்ட நிா்வாகம் இதில் எந்தவித இறுதி முடிவும் எடுக்க முடியாது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஜாதி பெயா்களை நீக்குவது குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. அதே நேரத்தில், இதற்காக என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசாணையில் தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஊா்கள், தெருக்களில் உள்ள ஜாதி பெயா்களை நீக்கும் விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கக் கூடாது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.