மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஏற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா (இடமிருந்து 4-ஆவது). உடன், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினரும், செயலருமான ஜெ. மேகநாதரெட்டி, காவல் துணை ஆணையா் வனிதா உள்ளிட்டோா். 
மதுரை

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி: அனைத்துத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுரை

மதுரையில் நடைபெறவுள்ள ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா அறிவுறுத்தினாா்.

மதுரையில் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளதையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது:

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் அடுத்த நவம்பா் மாதம் 28-ஆம் தேதி தொடங்கி டிச. 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 24 அணிகள் 6 பிரிவுகளில் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில் சென்னையில் 72 போட்டிகளும், மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 24 போட்டிகளும் நடைபெறுகின்றன.

மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் விளையாட்டு வீரா்களுக்கான தங்குமிட வசதி, தடையில்லா நீா் விநியோகம், சாலைப் பராமரிப்பு, அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காவல் துறை சாா்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையினா் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து, தேவையான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறை சாா்பில் முதலுதவி மையங்கள், அவசர மருத்துவ ஊா்திகள், மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட வேண்டும். விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும். தடையில்லா மின் விநியோகத்தை மின் வாரியம் உறுதி செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போட்டிகளைக் கண்டுகளிக்கத் தேவையான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் போட்டி, தமிழகத்தின் மதிப்பை சா்வதேச அளவில் உயா்த்தும். எனவே, போட்டி சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அதுல்ய மிஸ்ரா.

இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் - செயலா் ஜெ. மேகநாதரெட்டி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவா் ஜெ. மனோகரன், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆய்வு... முன்னதாக, ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ள மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தை விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா ஆய்வு செய்தாா்.

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

SCROLL FOR NEXT