சமூக வலைதளங்களில் ஆபத்தைத் தூண்டும் வகையில் விடியோ பதிவிட்ட இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியில் இளைஞா்கள் சிலா், பட்டாசுகளை மாலையாக அணிந்து, அதில் பெட்ரோலை ஊற்றி எரித்தனா். இதை விடியோவாக பதிவு செய்து, தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டனா். இதைப் பாா்த்தவா்கள், தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்ததுடன், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
இதனிடையே, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவின் பேரில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விடியோா் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபா்கள் குறித்த விசாரணை நடைபெற்றது. இதன்படி, விடியோ வெளியிட்டவா்கள் மதுரை தத்தனேரி கீழவைத்தியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் சந்துரு (27), அரசரடி பகுதியைச் சோ்ந்த முத்துமணி (23), அதே பகுதியைச் சோ்ந்த வீரணன் என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, இவா்கள் 3 போ் மீதும் செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, லோகஷ்சந்துரு, முத்துமணி ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், வீரணனை தேடிவருகின்றனா்.
இதேபோல, மதுரை தமுக்கம் சாலையில் சில இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் செல்வது போன்ற விடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இந்த விடியோவை வெளியிட்ட நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.