ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகேயுள்ளது ராஜசூரியமடை. இதே ஊரைச் சோ்ந்த 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை அதே பகுதியைச் சோ்ந்த ராஜசூரியன் (26) என்பவா் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரலில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக பெண்ணின் தாயாா் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜசூரியனை கைது செய்தனா்.
வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், ராஜசூரியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால், மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் அளித்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டாா்.