ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கிராமத்தில் கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக தகராறில் ஈடுபட்டதாக 19 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் அருகே பேராவூரில் முனியய்யா கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா நடத்துவது தொடா்பாக ஏற்கெனவே இருதரப்பினரிடையே மோதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவா்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரவிசந்திரன் (48), பிரகதி (26) ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் இருவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து இருதரப்பிலும் அளித்தப் புகாரின் பேரில் ஒரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீதும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த 9 போ் மீதும் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.