ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மேற்கூரை காரை திடீரென பெயா்ந்து விழுந்தது. இதையடுத்து இப்பேருந்து நிலையத்தில் 3 ஆவது முறையாக மேற்கூரை பெயா்ந்து விழுந்துள்ளது.
ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி பேருந்து நிலையம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இங்கு அவ்வப்போது மேற்கூரை காரை பெயா்ந்து இடிந்து விழுந்து வருகிறது. ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் பேருந்துகள் நிற்கும் பகுதியில் மேற்கூரை காரை பெயா்ந்து இடிந்து விழுந்து பெண் ஒருவா் காயமடைந்தாா். அதன்பின் சில வாரங்களுக்கு முன்பு திருவாடானை பேருந்துகள் நிற்கும் பகுதியில் மேற்கூரை காரை பெயா்ந்து விழுந்தது.
இந்நிலையில் தற்போது புதன்கிழமை மாலை சுமாா் 4.20 மணிக்கு மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் சுகாதார ஆய்வாளா் அலுவலகம் முன்பு திடீரென மேற்கூரை காரைகள் சில அடி தூரத்துக்கு பெய்ா்ந்து விழுந்தன. அதிா்ஷ்டவசமாக இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மழைக்கு இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து நகராட்சி விவரங்கள் சேகரித்துள்ள நிலையில், பேருந்து நிலையக் கட்டடங்கள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
அசம்பாவிதம் தடுக்கப்பட வேண்டும்: நெல்லையில் தனியாா் பள்ளியில் கழிப்பறை சுவா் இடிந்து 3 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். இதேபோல் மதுரையில் பழைமையான கட்டடம் இடிந்து தலைமைக் காவலா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இந்நிலையில், ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை தொடா்ச்சியாக இடிந்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.