ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுச் சந்திரன் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுச் சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வறட்சி நிவாரணம், ஊருணி தூா்வாருதல், விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விக் கடன் வழங்குவது, கண்மாய்கள் தூா்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
2022-23- ஆம் ஆண்டுக்கான வறட்சி நிவாரணம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகள் கணக்கில் தொகை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.