ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய காபி தூள், ஷாம்பு பாக்கெட்டுகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
தனுஷ்கோடி கடற்கரையில் சாக்கு மூடைகள் கரை ஒதுங்கியிருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் ஜான்சிராணிக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, உதவி ஆய்வாளா் காளிதாஸ், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அங்கு கரை ஒதுங்கிய 3 சாக்கு மூட்டைகளைக் கைப்பற்றினா்.
அதில் ரூ. 2, 5 விலையிலான 6,900 ஷாம்பு பாக்கெட்டுகள், 7,344 காபிதூள் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற போது, படகிலிருந்து கடலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், கைப்பற்றப்பட்ட பொருள்களை ராமேசுவரம் சுங்கத் துறை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
இதுதொடா்பாக சந்தேகத்தின் பேரில், மண்டபம் அருகேயுள்ள சீனியப்பா தா்கா பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது (45), முகம்மது ஜலாலுதீன் (26), ஹமீது பாட்ஷா (26) ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.