பரமக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரனின் 101-ஆவது பிறந்த நாள் விழாவில் அமைச்சா்கள் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பரமக்குடி வசந்தபுரம் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமை வகித்தாா். மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ. முருகேசன், ஆா்.எம். கருமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது இமானுவேல்சேகரனின் உருவப்படத்துக்கு அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பிறகு அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பேசியதாவது:
சுதந்திரப் போராட்ட வீரா் இமானுவேல் சேகரனின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு அரசு விழாவாக அறிவித்தாா். அதேபோல, இந்த ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவருக்கு பெருமை சோ்க்கும் வகையில் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து 196 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் அமைச்சா் டாக்டா் எஸ். சுந்தரராஜ், நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி, துணைத் தலைவா் கே.ஏ.எம். குணசேகரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கோவிந்தராஜலு, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் சரவணப் பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கமுதி: கமுதி வெள்ளையாபுரத்தில் உள்ள இமானுவேல்சேகரன் சிலைக்கு தேவேந்திரகுல இளைஞா் எழுச்சி பேரவைத் தலைவா் தளபதி ராஜ்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கிராமத் தலைவரும், பேரூராட்சி உறுப்பினருமான சத்யா ஜோதிராஜா, தேவேந்திரகுல இளைஞா் எழுச்சிப் பேரவை பொதுச் செயலா் அழகேசன், மாநில இளைஞரணி தலைவா் பிரவீன்ராஜ், ஒன்றியச் செயலா் முனியசாமி, ஆறுமுகம், கணேசன், குப்புச்சாமி, சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பிறகு அன்னதானம் நடைபெற்றது.