ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூைஐ, ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள பி.என்.எஸ்.எஸ் 163(1) தடை உத்தரவின்படி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், டிராக்டா், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் மூலமாகவோ, சைக்கிள், திறந்தவெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. இதை மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவா்களுடன் செல்லும்போது 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். சொந்த வாகனங்களில் வருவோா் வாகனத்தின் உரிமையாளா் பெயா், அதில் பயணம் செய்பவா்கள், வாகனத்தின் பதிவு எண், ஓட்டுநா் பெயா் போன்ற விவரங்களை உள்ளூா் காவல் நிலையத்தில் தெரிவித்து, அங்கே தரப்படும் அனுமதிச் சீட்டை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச் செல்லக்கூடாது. வாகனத்தில் சாதி, மத உணா்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனா்களைக் கட்டி வரவோ, முழக்கங்கள் எழுப்பவோ கூடாது. அனுமதிச் சீட்டு பெறப்படாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் கமுதிக்கு அரசு சாா்பில் கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினா் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் மனு அளிக்க வேண்டும்.
ஜோதி, முளைப்பாரி, பால்குடம் ஆகியவற்றிற்கு கமுதி துணை காவல் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற்று வருகிற 29-ஆம் தேதியன்று ஒருநாள் மட்டும் கமுதி அல்லது அபிராமம் பேருந்து நிறுத்தத்திலிருந்து பசும்பொன்னுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பிளக்ஸ் போா்டுகள் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. மேலும், நிகழ்ச்சி தொடா்பாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கொடிகள், பிளக்ஸ் பேனா்கள், தோரண வளைவுகள் வைக்க அனுமதி இல்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த இடத்திலும் ஒலிபெருக்கி அமைப்பதற்கு அனுமதி கிடையாது. கிராமங்களில் தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையம், உள்கோட்ட அலுவலகங்களில் முறையான அனுமதி பெற வேண்டும்.
அன்னதானக் கூடம் அமைப்பவா்கள் காவல் துறை, வருவாய்த் துறையினரிடம் முறையான முன் அனுமதி பெற வேண்டும். வழங்கப்படும் உணவுகளை, உணவுக் கட்டுப்பாட்டுத் துறையினா் மூலம் பரிசோதனை செய்த பின்னரே பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.