சிவகங்கை

சிவகங்கை அருகே அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம்: ஊரைக்காலி செய்யும் மக்கள்

சிவகங்கை அருகே நாட்டார் குடியில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து குடிநீர், போக்குவரத்து, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பலரும் ஊரை விட்டு வெளியேறிவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

DIN

சிவகங்கை அருகே நாட்டார் குடியில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து குடிநீர், போக்குவரத்து, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பலரும் ஊரை விட்டு வெளியேறிவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
  சிவகங்கை மாவட்டம் மாத்தூர் ஊராட்சிக்கு உள்பட்டது நாட்டார்குடி கிராமம். இந்த கிராமத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் 70 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இங்கு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான குடிதண்ணீர், போக்குவரத்து, சாலை, மின்சாரம், கல்வி உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலையில், அடுத்தடுத்து குடும்பம் குடும்பமாக ஊரை காலி செய்து வெளியேறி வருகின்றனர். இது வரையில் சுமார் 40 குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
  எஞ்சியவர்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் பலனில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் அவர்களும் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.    
இதுகுறித்து நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த மீ.சுந்தரம்(65)கூறியது: நாங்கள் அனைவரும் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலான கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம்.
எங்களது கிராமத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளான குடிநீர், போக்குவரத்து, சாலை, கல்வி ஆகியவற்றைப் பெறமுடியவில்லை.
நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே கிராமம் இப்படித்தான் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரிகளிடம் மனு அளித்துப்பார்த்தும் பலனில்லை. குடிநீர் வழங்குவதற்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. அவற்றிலும் தண்ணீர் இல்லாததால், சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள உப்பாற்றில் ஊற்று (சுமார் 6 அடி பள்ளம்) தோண்டி தண்ணீரை சேகரித்து பயன்படுத்தி வருகின்றோம். வெளியூர் செல்ல வேண்டுமெனில் ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள நல்லாகுளம் கிராமத்திற்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டும். எங்கள் ஊருக்கு வரும் சாலை பழுதடைந்தும், இரு புறமும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதாலும் இரவு நேரங்களில் பெண்கள் வரும்போது பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
  பெரும்பாலான குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறியதால், போதிய குழந்தைகள் இன்றி இங்கிருந்த தொடக்கப் பள்ளியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாட்டார்குடி கிராமத்துக்கு குடிதண்ணீர், போக்குவரத்து, சாலை, கல்வி உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அமைத்து தர வேண்டும் என்றார்.
இதுகுறித்து சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி கூறியது: குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாட்டார்குடி கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மீண்டும் சரி செய்யவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விரைவில் அவை செயல்படுத்தப்படும். மேலும் அங்கு மின் அழுத்தம் குறைவு காரணமாக செயல்படாமல் உள்ள சுத்திகரிப்பு நிலையமும் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT