மதுரவாயல் மேம்பாலத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களின் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தனது முன்னோடித் திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தமிழக அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளோ, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களோ பள்ளிகளில் தமிழைக் கட்டாய மொழியாக்க வேண்டும் எனக் கூறவில்லை. ஆனால் தற்போது அவர்கள் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஹிந்தி ஆலோசனைக் குழு ஹிந்தி மொழியை கற்பிக்க மாநில அரசுகள் ஊக்குவிக்கப்பட வேண்டுமேயன்றி கட்டாயப்படுத்தக் கூடாது என பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் ஹிந்தி கட்டாயமில்லை. மக்கள் விரும்பினால் படித்துக் கொள்ளலாம்.
தமிழக அரசின் அலட்சியப் போக்கினால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதுரவாயல் மேம்பாலத் திட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து, அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் பாஜக சந்திக்கத் தயாராக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.