திருப்புவனம் கூட்டுறவு பால் சங்கத்தில் திமுக-த.மா.கா.வினர் மோதல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில், திமுகவினருக்கும், தமிழ் மாநில
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில், திமுகவினருக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்குமிடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் சமரசம் செய்து வைத்தனர்.
திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு 2018 ஏப்ரல் 27 ஆம் தேதி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தபோது, திமுக மாவட்ட துணைச் செயலர் சேங்கைமாறன் தலைமையில் 11 பேரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.கே. பாலசுப்ரமணியம் தலைமையில் 11 பேரும் தனித்தனியாக போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்ததும் வாக்குகளை எண்ணுவதற்கு, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு தரப்பினர் தடை உத்தரவு பெற்றனர். இதனால், தேர்தலில் பதிவான வாக்குகள் சங்க கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டது.
இதே அறையில், சங்கத்தின் பிற ஆவணங்கள், பால் கூப்பன்கள், தீவன மூட்டைகள் இருந்ததால், அறையை திறந்து இவற்றை எடுப்பதற்கு தென்மாவட்டக் கூட்டுறவு தேர்தல் அதிகாரியிடம் சங்க அலுவலர்கள் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து, அறையை திறப்பதற்காக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கூட்டுறவு பால்வள மாவட்ட துணைப் பதிவாளர் கணேசன், தேர்தல் அலுவலர் நடராஜன், முதுநிலை ஆய்வாளர் பரமசிவம் மற்றும் போலீஸார் சங்கத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்குள் வந்த திமுக மாவட்ட துணைச் செயலர் சேங்கைமாறன், த.மா.க. வைச் சேர்ந்த பாரத்ராஜா ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இரு கட்சியினருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர், அங்கிருந்த திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் சேது மற்றும் போலீஸார், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர், இரு கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதையடுத்து, சீல் வைத்திருந்த அறையை அதிகாரிகள் திறந்து எடுக்கவேண்டிய ஆவணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அறையை மீண்டும் பூட்டி சீல் வைத்துச் சென்றனர்.