சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மினி லாரி ஓட்டுநருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு அளித்தது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சிறுபாலை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி பிரசாத் (29). மினிலாரி ஓட்டுரான இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு இவரது உறவினரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால், அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இது தொடா்பாக சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மணி பிரசாத், அவரது தந்தை, தாயாா் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாபுலால் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம் உறுதி செய்யப்பட்டதால், மணி பிரசாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளிதாா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற 5 பேரையும் விடுதலை செய்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரண நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.