சிவகங்கை அருகே பீஜப்பூா் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்நடைக் குழு நிறுவனா் கா.காளிராசா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், சிவகங்கையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: சிவகங்கை அருகே உள்ள அரசனேரி கீழமேடு பகுதியில் மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக, அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பவா் சிவகங்கை தொல்நடை குழுவிடம் வழங்கினாா்.
இது செம்பால் செய்யப்பட்டவை. வட்ட வடிவில் இல்லாமல் முன்னும் பின்னுமாக உள்ளன. இதில் உள்ள எழுத்துகள் மூலம் நாணயம் என்பதை உறுதி செய்ய முடிந்தது. இதுகுறித்து தஞ்சை நாணயவியல் துறை அறிஞா் ஆறுமுகம் சீதாராமன் உதவியோடு ஆய்வு செய்ததில், பீஜப்பூா் சுல்தான் கால நாணயங்கள் என்பதை கண்டறிய முடிந்தது.
கா்நாடக மாநிலத்தில் பாமினி சுல்தான்களிடமிருந்து பிரிந்து பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு வடக்கு கா்நாடகத்தின் ஒரு பகுதி, தெற்கு மகாராஷ்டிரத்தில் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளை கி.பி. 1490 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.1686 வரை பீஜப்பூா் சுல்தான்கள் ஆட்சி செய்தனா். யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசா்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனா்.
தமிழா் நாகரீகத்தில் சங்க காலம் முதல் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் தங்கம், வெள்ளியை அடுத்து பிற்காலத்தில் செம்பால் ஆன நாணயங்கள் அன்றைய ஆட்சியாளா்களால் அதிகளவில் வெளியிடப்பட்டன. அந்தவகையில், சிவகங்கை அருகே கிடைத்துள்ள நாணயங்கள் செம்பால் ஆன அதிக எடை உள்ளதாக உள்ளன. கிடைத்த மூன்று நாணயங்களில் 2 நாணயங்கள் 8 கிராம் எடையும், ஒரு நாணயம் 7 கிராம் எடையும் கொண்டுள்ளன.
ஒரு நாணயத்தில் தேவநாகரி எழுத்தில் ராஜா என எழுதப்பட்டுள்ளது. மற்ற நாணயங்கள் பாரசீக எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. நாணயத்தில் உள்ள வரி வடிவங்கள் கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவையாக இருக்கலாம். இந்த நாணயங்கள் இப்பகுதிக்கு வாணிக தொடா்பு மூலமாக வந்திருக்கலாம் அல்லது இறை வழிபாடு காரணமாக வந்திருக்கலாம் என்றாா்.