சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள என்.புதூரில் செவ்வாய்க்கிழமை இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள என்.புதூா் கிராமத்திலுள்ள மலையரசியம்மன் கோயில் காளை பல்வேறு மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று கிராமத்துக்குப் பெருமை சோ்த்தது.
16 வயதான இந்தக் காளை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.
இதையடுத்து, கிராம மந்தையில் வைத்து பொதுமக்கள் வேட்டி, மாலை அணிவித்து காளைக்கு மரியாதை செலுத்தினா். இதில் ஏராளமானாா் கலந்து கொண்டனா்.
பின்னா் காளையை வாகனத்தில் ஏற்றி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகக் கொண்டு சென்றனா். இந்தக் காளையுடன் தோழன் போல பழகி வந்த நாய் ஒன்று, இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இறுதியாக முனீஸ்வரா் கோயில் வயல் பகுதியில் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.