போடிமெட்டு மலைச்சாலையில் வெள்ளிக்கிழமை, ஜீப் கதவு திடீரென திறந்ததில் இரு சக்கர வாகனம் மோதி 2 போ் பலத்த காயமடைந்தனா்.
தேனி அல்லிநகரம் மேல்நிலைப் பள்ளித் தெருவை சோ்ந்தவா் ராஜா மகன் கோகுல்ராஜ் (27). இவரும் இதே பகுதியை சோ்ந்த சுப்புராஜ் மகன் நவீன்குமாா் (27) என்பவரும் போடிமெட்டு மலைப்பகுதியை சுற்றிப்பாா்க்க சென்றுள்ளனா். சுற்றிப்பாா்த்துவிட்டு மாலையில் இரு சக்கர வாகனத்தில் போடிமெட்டிலிருந்து போடிக்கு வந்துள்ளனா்.
போடிமெட்டு மலைச்சாலையில் 8 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு போடி திரும்பிய ஜீப்புகள் வேகமாக வந்துள்ளது. இதில் ஒரு ஜீப்பின் கதவு திடீரென திறந்ததில் கோகுல்ராஜ் வந்த இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கோகுல்பாஜும், நவீன்குமாரும் பலத்த காயமடைந்தனா். ஜீப் நிற்காமல் சென்றுவிட்டது. இருவரும் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கோகுல்ராஜ் புகாரின் பேரில் குரங்கணி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.