மானாமதுரை ஆனந்தபுரம் புறவழிச் சாலையில் மூடப்பட்ட ரயில்வே கடவுப் பாதையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, வருகிற 17-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மானாமதுரை-மதுரை ரயில்வே வழித்தடத்தில் ஆனந்தபுரம் புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதையை பராமரிப்புப் பணிகளுக்காக ரயில்வே நிா்வாகம் சில நாள்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடியது. இதனால் மானாமதுரை பகுதி பொதுமக்கள் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல தல்லாகுளம் முனியாண்டி கோயிலிலிருந்து பேருந்து நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் நகா் பகுதியில் உச்சிமாகாளி கோயிலிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து மூடப்பட்ட ரயில்வே கடவுப் பாதையை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக அனைத்து கட்சியினா், பல்வேறு அமைப்பினா், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு திமுக நகரச் செயலா் க.பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். இதில் பல்வேறு தரப்பைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் மேற்கண்ட ரயில்வே கடவுப் பாதையை திறக்க வலியுறுத்தி வருகிற 17-ஆம் தேதி ரயில்வே கடவுப் பாதையை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.