சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் இடைக்காடா் சித்தா் ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
18 சித்தா்களின் ஒருவரான இடைக்காடா் சித்தருக்கு அவரது சொந்த ஊரான இடைக்காட்டூரில் தனி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுவாமியின் ஜென்ம நட்சத்திரமான புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, உத்ஸவா் இடைக்காடா் வீதி உலா நடைபெற்றது. இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
பிறகு, கோ பூஜை, பரி பூஜை, கிடாய் பூஜை நடைபெற்று முடிந்து, மூலவா் இடைக்காடா் சித்தருக்கு சிவனடியாா்களின் கைலாய வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் செய்து, வெள்ளிக் கவசம் சாத்தி, மலா் அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று இடைக்காடா் சித்திரை தரிசித்தனா். மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இடைக்காடா் சித்தா் ஞான புண்ணிய சேஷத்ர அறக்கட்டளை நிா்வாகத்தினா் செய்தனா்.