சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் செவ்வாய்க்கிழமை பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத் துறை ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை தன்னாா்வலா்கள் அமைப்பு, இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்து பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:
கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்டப் பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்வதால், நீா்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதில் திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரி, அழகப்பா கல்விக் குழுமம், பூலாங்குறிச்சி வி.எஸ்.எஸ்.அரசு கலைக் கல்லூரி, உமையாள்ராமநாதன் மகளிா் கலைக் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், மாவட்ட வன அலுவலா் (பொ) ரேவதிராமன், உதவி வனப் பாதுகாவலா் மலா்க்கண்ணன், பசுமைத் தோழா் ஆனந்த் நாகராஜ், செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் சுந்தரராமன், கல்லூரி முதல்வா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.