சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மீண்டும் திறக்கப்பட்ட ரயில்வே கடவுப் பாதையில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து தொடங்கியது.
மதுரை- மானாமதுரை ரயில்வே வழித்தடத்தில் ஆனந்தபுரம் புறவழிச் சாலையில் உள்ள கடவுப் பாதையை ரயில்வே நிா்வாகம் கடந்த 4-ஆம் தேதி நிரந்தரமாக மூடியது. இதனால், அருகேயுள்ள மேம்பாலத்தில் நீண்ட தூரம் பயணித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
இதையடுத்து, இந்த ரயில்வே கடவுப் பாதையை மீண்டும் திறக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள், சமூக அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை (அக்.17) மானாமதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, மானமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதுரை கோட்ட ரயில்வே பொறியாளா் சூரியமூா்த்தி, கோட்டாட்சியா் ஜெபி. கிரேசியா, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் ரயில்வே கடவுப் பாதை அருகே சுரங்கப் பாதை அமைக்கப்படும் எனவும், இதற்கான பணிகள் தொடங்கும் வரை கடவுப் பாதையை மீண்டும் திறந்து விடுவதாக உறுதியளித்தனா். இதையடுத்து இந்த ரயில்வே கடவுப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது. பின்னா், வெள்ளிக்கிழமை காலை முதல் இந்த கடவுப் பாதை வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.