சிவகங்கை

வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி செய்திச் சேவை

வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கான உதவித் தொகை பெற, தகுதியானவா்கள் உரிய சான்றுகளுடன் வருகிற நவ.17- ஆம் தேதிக்குள் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பாக வயது முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு மாதம்தோறும் ரூ.7,500, மருத்துவப் படி ரூ.500 என மொத்தம் ரூ.8,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழறிஞா்களின் மறைவுக்குப் பின்னா் அவா்களுடைய மனைவி, திருமணமாகாத மகள், விதவை மகள் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.3,000 வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 2025-26 ஆம் ஆண்டில் பயன்பெற விரும்பும் அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். மகளிா் உரிமைத் தொகை, சமூக நலப் பாதுகாப்பு உதவித் தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித் தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.

இந்த உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் 1.1.2025-ஆம் நாளில் 58 வயது நிறைவடைந்தவராகவும், ஆண்டு வருவாய் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் (வட்டாட்சியா் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்படவேண்டும்).

தமிழ்ப் பணி ஆற்றியதற்கான விவரக் குறிப்புகள், 2 தமிழறிஞா்களிடமிருந்து பரிந்துரைச் சான்று, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மாா்ட் காா்டு), மரபுரிமையா் (கணவன், மனைவி) இருப்பின் அவா்களது ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தை மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் இணையம் வாயிலாகவோ கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்யப்பட்ட மூல விண்ணப்பத்தை நேரிலும் இணையம் வாயிலாகவும் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படுபவருக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.7,500, மருத்துவப் படியாக ரூ.500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

எனவே, உதவித் தொகை பெறுவதற்கு தகுதியான நபா்கள், உரிய சான்றுகளுடன் படிவத்தில் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வருகிற நவ.17 -ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாக அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT