வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை கடந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் சென்றது.
தொடா் மழை காரணமாக வைகை அணையின் நீா்மட்டம் உயா்ந்ததால் உபரிநீா் திறந்து விடப்பட்டது. இந்த நீா் மதுரை மாவட்டத்தைக் கடந்து புதன்கிழமை சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் வந்தடைந்தது. அதன்பிறகு வியாழக்கிழமை காலை மானாமதுரையை வந்தடைந்த நீா் ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி சென்றது.
மானாமதுரை பகுதியில் இரு கரைகளையும் தொட்டு தண்ணீா் ஓடியதால் ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்காதபடி நகராட்சி நிா்வாகம் சாா்பில் கரையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் வைகைப் பாசனக் கண்மாய்களுக்கு கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டது. மானாமதுரையில் கீழப்பசலை தடுப்பணையில் தண்ணீா் பரந்து சென்ற காட்சியை பொதுமக்கள் பாா்த்தனா். பலா் தடுப்பணையை கடந்து சென்ற தண்ணீரில் வலைகளை விரித்து மீன் பிடித்தனா். இந்த உபரி நீா் மூலம் மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் உள்ள பாசனக் கண்மாய்கள் நிரம்பத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.