தேனி

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

DIN

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 இம்மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழை பொய்த்து கடும் வறட்சி நிலவியது. அணைகளில் நீர்மட்டம் சரிந்ததால் 2-ஆம் போக நெல் சாகுபடி மற்றும் மானாவாரி விவசாயம் கைவிடப்பட்டது. இந்நிலையில், கேரளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் தேக்கடி, கம்பம் பள்ளத்தாக்கு, போடி மற்றும் பெரியகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது.
 அதே போல் உத்தமபாளையம், சின்னமனூர் சுற்று வட்டாரம் முழுவதும் புதன்கிழமை காலை 9 மணிக்கு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இது மாலை வரை நீடித்தது. இதுகுறித்து விவசாயி ராமர் கூறுகையில், பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்ற நம்பிக்கையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரமான உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பெரும்பான்மை மானாவாரி விவசாய நிலங்கள் உழுவு பணி மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துள்ளோம். தற்போது பெய்யத் தொடங்கிய இந்த சாரல் மழை இரு தினங்கள் தொடர்ந்தால் தான் நிலத்தில் நீட்டம் இறங்கி மானாவாரி விளைச்சல் அதிகரிக்கும் என்றார்.
குடிநீர் திட்டங்கள் தப்பியது: பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பில் மழையில்லாததால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. பெரியாறு அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால், கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணை நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து புதன்கிழமை 25.59 கன அடியாக இருந்தது.
 இந்நிலையில், தற்போது பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்டம், மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு தட்டுப்பாடின்றி தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாக பொதுப் பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.
ஜூலையில் முதல் போகம் தொடங்கும்:மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடிக்கு, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 2-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு பருமழை காலதாமதமாக தொடங்கியுள்ளதால், பெரியாறு அணையில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை தொடங்கியுள்ளதால், வரும் ஜூலை மாதம் முதல் வாரம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, முதல் போக நெல் சாகுபடி தொடங்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மானாவாரி நிலங்களில் கோடை உழுவு செய்துள்ள விவசாயிகள் விதைப்பு பணிக்கு தயாராகி வருகின்றனர்.
போடி: போடி பகுதியில் புதன்கிழமை காலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னர் பரவலாக சாரல் மழை பெய்தது. இந்த மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கொட்டகுடி ஆறு வறண்டு போயுள்ளதால் போடி நகராட்சியில் குடிநீர் ஆழ்துளை கிணற்றுநீருடன் சேர்த்தே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மழை தொடர்ந்து பெய்தால் ஆற்று நீர் மட்டும் விநியோகிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் நகராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT