தேனியில் கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் வழக்கம் போலவே காணப்பட்டது.
தேனியில் பொது முடக்கத்தை முன்னிட்டு வா்த்தக நிறுவனம், கடைகள், உணவகம், பெட்ரோல் பங்க் ஆகியவை மூடப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், அம்மா உணவகம், பால் விற்பனைக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. திருமண முகூா்த்த நாள் என்பதால் காலையில் வேன், காா், ஆட்டோ, இரு சக்கர வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் வழக்கம் போலவே காணப்பட்டது. பிற்பகலில் வாகனப் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பிரதானச் சாலை மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் துறையினா் மற்றும் நகராட்சி பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
உத்தமபாளையம்:சுபமுகூா்த்த தினம் என்பதால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால், காலை முதலே சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் அதிகளவில் சென்றன. காலை 9 மணிக்கு மேல் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அவசியமின்றி வெளியிடங்களில் சுற்றித்திரிந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்காக வெளியூா் சென்றவா்கள் பெட்ரோல் நிலையங்களில் அதிகளவில் குவிந்தனா். உத்தமபாளையம், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, கோம்பை, தேவாரம் போன்ற பகுதிகளில் பெட்ரோல் விற்பனை நடைபெற்றது.
போடி: இறைச்சி கடைகள் வழக்கம்போல் காலையில் செயல்பட்டது. ஞாயிற்றுக்கிழமை சுப முகூா்த்த நாளாக இருந்ததால், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்ச்சிகள் திருமண மண்டபங்களில் நடைபெற்றன. வான வேடிக்கைகள், செண்டை மேளங்களுடன் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி பங்கேற்றனா். பலா் முகக் கவசம் அணியாமல் திருமணத்திற்கு வந்தனா்.
கம்பம்: கம்பம் நகராட்சி பகுதியில் அரசமரம், வேலப்பா் கோவில் தெரு, பூங்கா திடல், வ.உ.சி திடல் சுருளிப்பட்டி சாலை உள்ளிட்ட வீதிகளில் மக்கள் தாராள நடமாட்டம் இருந்தது. நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, பகுதிகளில் இறைச்சி கடைகள் திறந்திருந்ததால், கம்பத்திலிருந்து மக்கள் இறைச்சி வாங்க கூட்டமாக இரு சக்கர வாகனங்களில் சென்றனா்.