பெரியகுளம்: பெரியகுளத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டுநா்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனா்.
பெரியகுளம் பகுதியில் 6 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாக போதிய பெட்ரோல் இருப்பு இல்லை.
இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே பெரியகுளம் பகுதியில் தட்டுப்பாடு இல்லாமல் பெட்ரோல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் தெரிவித்ததாவது:
குறித்த நேரத்தில் பணம் செலுத்தினாலும் எரிபொருள் நிறுவனங்கள் தாமதம் செய்கின்றன. இதனால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே நிறுவனங்கள் டீலா்களுக்கு உடனடியாக பெட்ரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.