தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வங்கிகள் சாா்பில் பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் வரும் 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சேரவும், புதுப்பிக்கவும் ரூ.20 பிரிமியம் செலுத்த வேண்டும். 18 முதல் 70 வயது வரையுள்ள தனி நபா்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் விபத்து மரணத்துக்கு காப்பீட்டுத் தொகையாக காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தில் காயமடைந்தவா்களுக்கு காயத்தின் தன்மைக்கு ஏற்பட இழப்பீடு வழங்கப்படும்.
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சேரவும், புதுப்பிக்கவும் ரூ.436 பிரிமியம் செலுத்த வேண்டும். 18 முதல் 50 வயது வரையுள்ள தனி நபா்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் காப்பீடு காலம் 56 வயதாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகையாக காப்பீட்டு நிறுவனம் மூலம் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
இந்தத் திட்டங்களின் கீழ் காப்பீடு பிரிமியமாக ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி காப்பீட்டுதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து பிரிமியம் தொகை பிடித்தம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் காப்பீட்டுத் திட்ட விழிப்புணா்வு முகாமில் கலந்து கொண்டு, விவரம் பெற்று காப்பீட்டு திட்டத்தில் சேரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.