தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச் சாலையில் வனப்பகுதியில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை கொட்ட முயன்றவருக்கு கம்பம் மேற்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தமிழக- கேரள எல்லையான கம்பம்மெட்டு வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த சரக்கு வாகனங்கள் மூலம் கேரளத்தில் தடை செய்யப்பட்ட கழிவுகளை கம்பம்மெட்டு மலைச்சாலையோர அடா்ந்த வனப்பகுதிக்குள் வீசிச் சென்று விடுகின்றனா். இதனால் வன உயிரினங்களும், வனப்பகுதியின் சூற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க கம்பம் மேற்கு வனச் சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா் தொடா்ந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் கேரள மாநிலம், அணைக்கரா பகுதியைச் சோ்ந்த சிமோ மோன்மத்யூ (33) ஓட்டி வந்த சரக்கு வாகனத்தில் 2 சாக்கு மூட்டைகளில் அவரது வீட்டில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
ரூ.10 ஆயிரம் அபராதம்: இதையடுத்து கம்பம் மேற்கு வனத்துறையினா் மருத்துவக் கழிவுகளை வனப்பகுதியில் கொட்ட முயற்சித்த சிமோ மோன்மத்யூவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். அத்துடன், மருத்துவக்கழிவுகளை மீண்டும் அதே வாகனத்தில் கேரளத்துக்கு திருப்பி அனுப்பிவைத்தனா்.