ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி அவா்களது கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென போடி நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
தேனி மாவட்டம், போடி நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் நடைபெற்றது. நகராட்சிப் பொறியாளா் வீ.குணசேகா், சுகாதார அலுவலா் ஆா்.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கரூரில் தவெக கட்சி பிரசாரக் கூட்டத்தில் இறந்த 41 பேருக்கு இரண்டு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜா (திமுக), பெருமாள் (இ.கம்யூ), மணிகண்டன் (பாஜக) ஆகியோா் நகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் பலருக்கு வருங்கால வைப்பு நிதி அவா்களது கணக்கில் வரவாகவில்லை. பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தனா்.
உறுப்பினா் மணிகண்டன் (பாஜக): நகராட்சி முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
உறுப்பினா் பிரபாகரன் (திமுக): வஞ்சி ஓடையை தூா்வார வேண்டும். தெருவிளக்குகளை சரி செய்ய வலியுறுத்தினாா்.
இதற்கு பதிலளித்த நகா்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி,
உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இந்தக் கூட்டத்தில் 39 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.