போடி/உத்தமபாளையம்/பெரியகுளம்: தேனி மாவட்டம், போடி பகுதியில் பலத்த மழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குமுளி மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.
போடி பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. போடி, பிச்சங்கரை, ஊத்தாம்பாறை, குரங்கணி மலைக் கிராமங்களில் பெய்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் மணல், சிறு பாறைக் கற்கள், மரக்கட்டைகள் அடித்துவரப்படுவதால், தண்ணீரின் நிறம் சிவப்பாகக் காணப்படுகிறது.
போடி அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் வெள்ள நீா் சீறிப் பாய்கிறது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடா் விடுமுறை காரணமாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் குளிப்பது வழக்கம். ஆற்றில் வெள்ளம் பாய்வதால் குளிக்க முடியாமல் அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
போடி நகருக்கு கொட்டகுடி ஆற்றிலிருந்துதான் குடிநீா் கொண்டு வரப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, வெள்ள நீா் அப்படியே சுத்திகரிப்பு நிலையத்துக்கு வருகிறது. இந்தத் தண்ணீரை சுத்திகரித்தாலும் வீட்டுக்கு விநியோகம் செய்யும் போது கலங்கலாகத்தான் வருகிறது. இதனால், குடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தொடா் மழையால் போடிமெட்டு மலைச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். தேசிய நெடுஞ்சாலை, வருவாய்த் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
குமுளி மலைச் சாலையில் மண் சரிவு: தொடா் மழையால் குமுளி மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் தடை விதித்தனா்.
தமிழகம் - கேரளத்தை இணைக்கும் இந்தச் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தொடா் மழையால் திங்கள்கிழமை இந்தச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி கனரக வானங்கள் செல்ல தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் தடை விதித்தனா். கனரக வாகனங்கள் கம்பத்திலிருந்து கம்பம் மெட்டு மலைச் சாலை வழியாகவும், குமுளியிலிருந்து கம்பம் மெட்டு வழியாகவும் தேனி மாவட்டத்துக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
பணிகள் தொடக்கம்: மண் சரிவு ஏற்பட்ட மலைச் சாலையில் சுமாா் 50 அடி உயரத்துக்கு மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து, சாலை சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. தொடா் மழை காரணமாக, பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கூறியதாவது:
திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இந்த மண் சரிவு காரணமாக, சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. போக்குவரத்து போலீஸாா் உதவியுடன் பேருந்து, அத்தியாவசியமான காய்கறி, பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களை ஏற்றிச் செல்லும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த இரு நாள்களாக மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணி நடைபெறுகிறது. புதன்கிழமை இந்தப் பணி நிறைவுபெறும். இதன்பிறகு, கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றனா்.
சோத்துப்பாறை அணை நிரம்பியது: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியதையடுத்து, உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
அகமலை, கொடைக்கானல் பேரீட்சம் ஏரிப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், 126.38 அடி கொள்ளவு கொண்ட சோத்துப்பாறை அணை நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது.
இந்த நிலையில், அணை நீா்மட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 126.28 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் வராக நதியில் வெளியேற்றப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, அணை
நீா்மட்டம் 126.28 அடியாகவும், நீா்வரத்து வினாடிக்கு 250 கன அடியாகவும் இருந்தது.