ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.சிவக்குமார், செயலாளர் நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா ஆகியோர், நரிக்குறவர் இன மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலையில் உள்ள நரிக்குறவர் வசிக்கும் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.சிவக்குமார், செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா ஆகியோர் அரசு அலுவர்களுடன் சென்றனர்.
அங்கு வசிக்கும் சுமார் 40 குடும்ப மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
தண்ணீர் வசதி, மின் இணைப்பு, இலவச பட்டா உள்ளிட்டவற்றைக் கேட்டனர்.
மேலும் தாங்கள் காடுகளுக்குள் செல்லும் போது, தங்கள் பிள்ளைகள் தங்கி படிக்க வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
தண்ணீர் வசதி மற்றும் மின் இணைப்புப் பெற்றுத் தர ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவர்களது பிள்ளைகள் தங்கி படிக்க, குழந்தைகள் நல அலுவலரை, தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து குழந்தைகள் மற்றும் பெற்றோரை சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் வியாழக்கிழமை விருதுநகருக்கு தனி வாகனத்தில் குழந்தைகள் நல குழுவிற்கு அழைத்துச் சென்று உரிய அலுவலக நடைமுறைகளைச் செய்து, குழந்தைகள் விடுதியில் இலவசமாக தங்கி பள்ளியில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் நரிக்குறவர் இன மக்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்ட மாவட்ட நீதிபதியிடம் கொண்டு வந்தனர். ஒரு ஆண் குழந்தைக்கு தமிழ்ச்செல்வன் என்றும், பெண் குழந்தைக்கு ஜனனி என்றும் நீதிபதி பெயர் சூட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.