முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே இருபிரிவினரிடையே மோதல்: 5 பேர் காயம்; 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளம்பரப் பதாகை சேதப்படுத்தியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:29 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளம்பரப் பதாகை சேதப்படுத்தியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த  9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் செவ்வாய்க்கிழமை நால்வரைக் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கட்டையத்தேவன்பட்டியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் விளம்பரப் பதாகை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக சுப்பையா மகன் விக்னேஷ் (25) என்பவருக்கும், இதே இடத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிக்கனி (27) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு விக்னேஷ் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், தடுக்க வந்த உறவினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நத்தம்பட்டி காவல் நிலையத்தில்  புகார் செய்தார். 
இதுதொடர்பாக போலீஸார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முத்துக்கனி, வினோத்குமார், மாரிமுத்து ஆகியோரைக் கைது செய்தனர். காயமடைந்த விக்னேஷ் மற்றும் சுப்பையா மனைவி செல்வி (40) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்தரப்பு புகார்: இதே முன்விரோதத்தில் தன்னை எதிர்தரப்பினர் இரும்புக் கம்பியால் தாக்கியதாகவும், தடுக்க வந்த உறவினர்களையும் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் மாரிக்கனி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சுப்பையா என்பவரை கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த மாரிக்கனி, க.வினோத்குமார் (27), க.முத்துக்கனி (30) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.