மது குடிக்க பணம் தர மறுத்தவர் கொலை: இருவருக்கு ஆயுள் சிறை
மது குடிக்க பணம் தர மறுத்தவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், 2 பேருக்கு
மது குடிக்க பணம் தர மறுத்தவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விருதுநகர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தில் உள்ள தெற்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி மூர்த்தி(50). இவர், பாலவநத்தம்-இருக்கன்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (65), முத்துப்பாண்டி (35) ஆகியோர் வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்த மூர்த்தி கற்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். கடந்த 2012 மார்ச் 6 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து காளிமுத்து, முத்துபாண்டியை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு, விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இவ்வழக்கில் அரசுத்தரப்பில் வழக்குரைஞர் பாஸ்கர் வாதாடினார். இந்த வழக்கு விசாரணை முடிவில், காளிமுத்துவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், முத்துப்பாண்டிக்கு ஆயுள் சிறைத் தண்டனை, வழி மறித்தலுக்காக 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிதி எஸ்.டி.பரிமளா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். மேலும், இருவரும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, இருவரையும், போலீஸார் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.