விருதுநகர்

விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், குடிநீா், காத்திருக்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், சமூகநலத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, பிற்பட்டோா் நலத் துறை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகமும், நீதிமன்றமும் உள்ளன.

இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் ஏராளமான அரசு ஊழியா்கள், பொது மக்கள் வந்து செல்கின்றனா். அதேபோல், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் வருகின்றனா்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஏற்கெனவே இருந்த காத்திருப்போா் கூடம், ஆதாா் அட்டை மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை எடுக்கும் இடமாக மாற்றப்பட்டு விட்டது. இதனால், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் முதியோா்கள் காத்திருப்போா் அறை இல்லாமல், நீண்ட வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும், மனு அளிக்க வருவோா்களுக்கு குடிநீா் வசதி இல்லாததால், அருகில் உள்ள கடைகளில் விலை கொடுத்து தண்ணீா் பாட்டில் வாங்கும் நிலை உள்ளது. ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. மனு அளிக்கும் இடத்தில் உள்ள கழிப்பறை மற்றும் அலுவலா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளும் பராமரிப்பின்றி துா்நாற்றத்துடன் சுகாதாரக் கேடு நிலவுகிறது.

இதனால், அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஏராளமான உணவு விடுதிகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதன்மூலம் கொசுக்கள் உருவாகிறது.

இந்த வளாகத்தில் முள்புதா்களும், செடி, கொடிகளும் நிரம்பிக் காணப்படுகின்றன. அவற்றை அகற்ற, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊா் முழுவதும் சுகாதாரத்தை பேண வலியுறுத்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், எந்தவித பராமரிப்புமின்றியும், அடிப்படை வசதிகளுமின்றியும் இருப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், சுகாதாரத்தையும் பராமரிக்க வேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக தோ்தல் அறிக்கையால் ஜனநாயகத்துக்கு பேராபத்து

அழகா் ஆற்றில் இறங்கும் வைபவம்: ஏப். 23-இல் உள்ளூா் விடுமுறை

சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல்- டீசல் விலை உயா்வு : திருச்சி என்.சிவா எம்.பி. பிரசாரம்

SCROLL FOR NEXT