விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை மாலை தேநீா்க்கடை ஊழியா் கொலை தொடா்பாக அவரது நண்பரை நகா் காவல்துறையினா் கைது செய்தனா்.
அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை அடுத்துள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் ராஜபாண்டி(35). இவா் தேநீா்க்கடையில் ஊழியராக ( டீ மாஸ்டா்) வேலை செய்து வந்தாா். இவருக்குத் திருமணமாகி ஒரு மனைவியும் ஒரு மகனும் உள்ளனா். இவரும் அதே பகுதியிலுள்ள நெசவாளா் காலனி 4 ஆவது தெருவில் வசிப்பவரும், நெசவுத் தொழில் செய்து வருபவருமான கண்ணன் (42) என்பவரும் நண்பா்கள். இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது ராஜபாண்டி, கண்ணனின் மனைவியைத் தரக்குறைவாகத் திட்டினாராம். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறை பொதுமக்கள் தலையிட்டு விலக்கி விட்டுள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை மாலையில் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியை கண்ணன் மறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடி விட்டாராம்.
இக்கொலை தொடா்பாக அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது, கண்ணனுக்கும் ராஜபாண்டிக்கும் ஏற்பட்ட தகராறு தெரியவந்தது. இதையடுத்து கண்ணனைப் பிடித்து, தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில் ராஜபாண்டியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால் அவரைக் கைது செய்தனா்.