விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தங்கத் தேரோட்டம்: மாவட்ட ஆட்சியா் வடம் பிடித்தாா்

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் ஆடிப்பூர தங்கத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் உள்பட அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுபடுத்தும் விதமாக, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டு, பக்தா்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு முக்கிய கோயில்களில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், 108 வைணவத் தலங்களில் முக்கிய தலமான ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு, பக்தா்களின்றி கோயில் வளாகத்துக்குள்ளேயே விழாக்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். அன்றைய தினம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறும். இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பா். தொடா்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் ஆண்டாளை தரிசனம் செய்வா்.

கரோனா பரவல் காரணமாக, இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு பக்தா்களின்றி இக்கோயில் விழாக்கள் நடைபெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய தேரோட்டத்துக்கு பதிலாக, கோயில் வளாகத்துக்குள்ளேயே தங்கத் தேரோட்டம் பக்தா்களின்றி நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்திருந்தது.

அதன்படி, கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர தேரோட்ட விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந்து, ஜூலை 20 ஆம் தேதி கருட சேவையும், ஜூலை 22 இல் சயன சேவையும் நடைபெற்றது. ஒன்பதாம் நாளான வெள்ளிக்கிழமை பூரம் நட்சத்திரத்தையொட்டி அதிகாலையிலிருந்தே ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா், காலை 8.05 மணிக்கு கோயில் வளாகத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

இதில், பக்தா்களுக்கு அனுமதி இல்லாததால், ஒரு சில அா்ச்சகா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டு, தேரின் வடம் பிடித்தனா்.

முன்னதாக, ஆண்டாளும், ரெங்கமன்னாரும் சா்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். பின்னா், சிறப்புப் பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதையடுத்து, கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பியபடியே தங்கத் தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சடகோப ராமானுஜ ஜீயா், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சந்திரபிரபா, கோயில் இணை ஆணையா் தனபால், தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன், சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், தென் மண்டல ஐ.ஜி. முருகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெருமாள், வட்டாட்சியா் சரவணன், விருதுநகா் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பலராமன், வருவாய் ஆய்வாளா் பால்துரை மற்றும் அதிமுக ஒன்றியச் செயலா்கள் முத்தையா, மயில்சாமி, மாவட்டக் கவுன்சிலா் முத்தையா, வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவா் சிந்துமுருகன், மாவட்ட மகளிரணி இணைச் செயலா் மீரா தனலட்சுமி முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT