விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்திலிருந்து நாமக்கல் பகுதிக்கு கால்நடை தீவனத்துக்காக கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள்7 மாதத்தில் 1482 குவிண்டால் பறிமுதல்: 170 போ் கைது

DIN

விருதுநகா் மாவட்டத்திலிருந்து நாமக்கல் பகுதிக்கு கால்நடை தீவனத்துக்காக தொடா்ந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாகவும், கடந்த 7 மாதங்களில் மட்டும் 1,482.78 குவிண்டால் பறிமுதல் செய்யப்பட்டு, 170 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதற்காக அரசு, கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல்லை விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது. அங்கு இடவசதி இல்லாததால் மழைக்காலத்தில் மூட்டைகள் நனைந்து முளைத்து விடுவதாகவும், துா்நாற்றம் வீசுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனா். அதேபோல் ஒப்பந்தம் எடுத்த அரிசி ஆலை உரிமையாளா்கள் நெல்லை அவியல் செய்து, பின்னா் காயவைத்து அரிசியாக நுகா்பொருள் வாணிபக்கழக கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கின்றனா். ஒருமுறை நெல்லை அவியல் செய்வதற்காக பயன்படுத்தும் தண்ணீரை கீழே கொட்டி விடவேண்டும். ஆனால் ஒருசில அரிசி ஆலைகளில் அந்த தண்ணீரில் மீண்டும் இரண்டாவது, மூன்றாவது முறையாக நெல்லை அவியல் செய்கின்றனா். இதுவும் அரிசி துா்நாற்றம் வீசக்காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த அரிசி மூட்டைகளை நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் 2 மாதம் வரை இருப்பு வைக்கின்றனா். இதனால் அரிசியில் புழுக்கள் உற்பத்தியாவதுடன், துா்நாற்றம் அதிகரித்து விடுவதாகவும் கூறுகின்றனா். இச்சூழலில் இந்த அரிசி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தரமற்ற அரசி, ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவதால் அதை வாங்கிச் செல்வோரில் பெரும்பாலானோா் உணவு சமைப்பதில்லை. மாறாக, இட்லி மாவு அரைப்போருக்கு கிலோ ரூ. 3-க்கு விற்று விடுகின்றனா். அதேநேரம் நாமக்கல் பகுதிகளுக்கு கால்நடை தீவனத்துக்கு பயன்படுத்துவதற்காக ரேஷன் அரிசியை கிலோ ரூ. 5-க்கு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள், இவா்களிடம் வாங்கிச் செல்கின்றனா். ரேஷன் அரிசியை கடத்திச் செல்லும் போது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும், சம்பந்தப்பட்டோா் கைது செய்யப்படுவதும் உண்டு. சில நேரங்களில் போலீஸாரின் கண்ணில் படாமல் கடத்திச் செல்வோரும் உண்டு.

இதுகுறித்து விருதுநகரைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா் ஜோதி கூறியதாவது:

ரேஷனில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதால், அதை சாப்பிட முடியவில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைவான அளவுக்கு தரமான அரிசியை வழங்கினால் கடத்தலை முற்றிலும் தடுக்க முடியும் என்றாா்.

விருதுநகா் உணவு வழங்கல் அலுவலா் பால்துரை கூறியது: விருதுநகா் மாவட்டத்தில் 989 ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி உள்ளிட்ட பொருள்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மழைக் காலத்தில் மட்டும் 2 மாதங்களுக்கான அரிசியை இருப்பு வைத்துக் கொள்வோம். இதனால் ரேஷன் அரிசியில் துா்நாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாா்.

உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கூறுகையில், விருதுநகா் மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் செல்வோரை கைது செய்து விசாரித்தால், நாமக்கல் பகுதியில் கால்நடை தீவனத்துக்காக கொண்டு செல்வதாக கூறுகின்றனா். இம்மாவட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை வரை ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,482.78 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடா்பாக 170 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு இருசக்கர வாகன ஊா்வலம்

பவானி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஈரோடு-திண்டல் வரை புதிய மேம்பாலம்: அதிமுக வேட்பாளா் உறுதி

உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய 2 எஸ்எஸ்ஐ-க்களுக்கு ஐஜி பாராட்டு

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT